பெரிய இரும்பேடு தாங்கல் ஏரியில் மண் எடுப்பதில் விதிமீறல்
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த பெரியஇரும்பேடு தாங்கல் ஏரி, 96 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த ஏரி வாயிலாக, அப்பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த ஏரியில் இருந்து, நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் திட்டப்பணி மற்றும் கேளம்பாக்கம்- - தையூர் ஆறுவழிச்சாலை பணிக்காக மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இதில், அனுமதிக்கப்பட்ட ஒரு மீட்டர் ஆழத்திற்குள் மண்ணை அள்ளாமல், அரசு அனுமதித்த அளவை விட, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, 500 லாரிகளுக்கு மேல் விதியை மீறி மண் அள்ளப்படுகிறது.இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், அபாய பள்ளங்கள் உருவாகி வருகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, உரிய விதிகளின்படி மண் அள்ள உத்தரவிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.அதுமட்டுமின்றி, ஏரியில் இருந்து அள்ளப்படும் சவுடு மண், பெரியஇரும்பேடு சாலை, செங்கல்பட்டு - -திருப்போரூர் சாலை, ஓ.எம்.ஆர்., சாலை வழியாக, லாரிகளின் அளவை விட கூடுதலாக குவித்து எடுத்து செல்லப்படுகிறது.அதன் மீது தார்ப்பாய்கள் மூடப்படுதும் இல்லை. இதனால், மண் குவியல்கள் சாலை முழுதும் சிதறுகின்றன. அவை, புழுதியாக மாறி, மற்ற வாகன ஒட்டிகள் மீதும் விழுகின்றன.ஏரியில் இருந்து சவுடு மண் எடுத்து செல்லும் லாரிகள், தார்ப்பாய் போட்டு மூடியபடி பயணிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.