மேலும் செய்திகள்
ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் அதிகாரிகள் அடம்
18-Sep-2024
கூடுவாஞ்சேரி:நந்திவரத்தில் சிறிய தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு, கிருஷ்ணாபுரம், ராணி அண்ணா நகர், மலைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மழைநீர் வடிகால்வாய் வாயிலாக நீர்வரத்து உள்ளது.அதனால், எப்போதும் நீர் உள்ள இந்த ஏரி, சுற்றுவட்டார பகுதி நிலத்தடி நீர்மட்டம் மற்றும் கிணற்று நீர் மட்டம் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.பரந்து விரிந்து இருந்த இந்த ஏரி, தற்போது ஆக்கிரமிப்புகளால் சுருங்கிய நிலையில் காட்சியளிக்கிறது. இந்த ஏரியை, நகராட்சி பொது நிதியிலிருந்து, 1.36 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.இப்பணி துவங்குவதற்கு முன், நகராட்சி சார்பில் ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் கலக்கும் விதமாக உள்ள இணைப்புகளை துண்டித்தும், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.அதற்கு, ஏரியின் கரைகளை பலப்படுத்தி, தொடர்ந்து மழை நீரை சேகரித்து வைத்து, மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் விதமாக பணிகள் நடைபெற உள்ளன என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:தாங்கல் ஏரி சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டு, தற்போது நடந்து வருகின்றன. நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தது போல், ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், பணிகள் நடந்து வருகின்றன.இந்த ஏரியின் மேற்கு பகுதியில் சர்ச்சும், தெற்கு பகுதியில் கோவிலும், அதன் அருகில் சில வீடுகளும் என, அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. தற்போது, ஆக்கிரமிப்புகளை சிறிதளவு கூட அகற்றாமல், நகராட்சி நிர்வாகம் ஏரி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.மேலும், ஏரி நீர் மாசடையும் விதமாக, ஏரியின் தெற்கு பகுதியில் இருந்தும், மேற்கு பகுதியில் இருந்தும், வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் நேரடியாக ஏரியில் கலக்கப்படுகிறது. அதையும் தடுக்க நகராட்சி முயற்சி எடுக்கவில்லை.எனவே, ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை சீரமைக்க வேண்டும். அதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
18-Sep-2024