ஜமாபந்தி நிறைவு 250 மனுக்களுக்கு தீர்வு
மதுராந்தகம்:மதுராந்தகம் தாலுகாவில், ஜமாபந்தி நிறைவு நாளான நேற்று, 250 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை, வருவாய் தீர்வாய அலுவலர் ரம்யா வழங்கினார்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த, 14ம் தேதி, ஜமாபந்தி முகாம் துவங்கியது.நேற்று வரை, கடந்த 11 நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில், மதுராந்தகம் தாலுகாவில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட மக்களிடமிருந்து மனுக்கள் வரப்பெற்றன.அதில் பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் இருந்தன.அதன்படி நேற்று வரை, பொதுமக்களிடமிருந்து 1,180 மனுக்கள் பெறப்பட்டன.இந்நிலையில் நேற்று, ஜமாபந்தி முகாம் நிறைவடைந்ததை தொடர்ந்து, மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, உடனடி தீர்வாக 250 பயனாளிகளுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில், மதுராந்தகம் வட்டாட்சியர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இதேபோல, செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முன்னிலையில் நடந்து வந்த ஜமாபந்தி முடிவடைந்து, 103 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்த ஜமாபந்தியில், 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டன.