உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் கொளவாய் ஏரி சீரமைப்பு பணிகள்... முடக்கம்:ரயில்வே தாமதத்தால் படகு குழாம் கனவு தகர்ந்தது

செங்கையில் கொளவாய் ஏரி சீரமைப்பு பணிகள்... முடக்கம்:ரயில்வே தாமதத்தால் படகு குழாம் கனவு தகர்ந்தது

மறைமலை நகர்: செங்கல்பட்டில், 2,210 ஏக்கர் பரப்பளவுள்ள கொளவாய் ஏரியை துார்வாரி மீண்டும் படகு குழாம் விடும் பணிகள், ஐந்து ஆண்டுகளாக முடங்கியுள்ளன. ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்ற, 4.53 கோடி ரூபாய் ஒதுக்கித் தந்தும் ரயில்வே துறை தாமதப்படுத்துவதால், பொதுப்பணித்துறையால் பணிகளை துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, செங்கல்பட்டு கொளவாய் ஏரி, ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி அமைந்துள்ளது. ஏரி, 15 அடி ஆழம், 2,210 ஏக்கர் பரப்பளவில் உடையது. இதில் 5 மதகுகள் உள்ளன. குண்டூர் ஏரி மற்றும் செங்கல்பட்டு பகுதியை சுற்றியுள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், இந்த ஏரியை வந்தடையும் வகையில், கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கொளவாய் ஏரி நிரம்பியபின், உபரி நீர் நீஞ்சல் மதகு கால்வாய் வாயிலாக, பொன்விளைந்த களத்துார் ஏரியை சென்றடையும். அங்கிருந்து மேலும், 14 ஏரிகளுக்கு தண்ணீர் சென்று, விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, செங்கல்பட்டு நகராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து கழிவுநீர் நேரடியாக கொளவாய் ஏரியில் கலப்பதால், ஏரி நீரை குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த ஏரி, 41 ஆண்டுகளுக்கு முன் துார்வாரப்பட்டு, 1998ல் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு குழாம் அமைக்கப்பட்டது. மாசடைந்த தண்ணீர் காரணமாக இரண்டு ஆண்டுகளில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. நகர பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, படகு குழாம் மற்றும் பூங்காவுடன் கூடிய பொழுது போக்கு அம்சங்களுடன் ஏரியை சீரமைக்க, 2020 டிச., 16ல், 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தில் ஏரியை ஆழப்படுத்துதல், கரையை பலப்படுத்துதல், நடைபாதை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள முடிவானது. ஏரியை துார்வாரிய மண்ணை கொண்டு மூன்று மணல் திட்டுக்கள் அமைத்தல், தீவுகள் அமைத்து பூங்கா, சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளுக்கு 2021 செப்டம்பரில், டெண்டர் கோரப்பட்டது. இந்நிலையில், ஏரி நீரை வெளியேற்றும் கலங்கல் பகுதியில், ரயில்வே மேம்பாலம் உள்ளதால் தண் ணீரை வெளியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, மூடுகால்வாய் அமைத்து தண்ணீரை வெளியேற்ற முடிவானது. மூடு கால்வாய் அமைக்க கடந்த 2023ம் ஆண்டில், 2.03 கோடி ரூபாயை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், ரயில்வே துறைக்கு வழங்கினர். இருப்பினும், 2 ஆண்டுகளாக எந்த பணிகளும் மேற்கொள்ள பட்டவில்லை. இதையடுத்து, கடந்த ஆண்டு பணிகள் குறித்து அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார். பின், ரயில்வே துறை பொறியாளர்கள் இந்த பகுதியை ஆய்வு செய்து, மூன்று இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் வகையில் திட்ட அறிக்கை தயாரித்து கூடுதலாக, 2.50 கோடி ரூபாய் தேவைப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அறிக்கை வழங்கினர். இதையடுத்து, சமீபத்தில் 2.50 கோடி ரூபாய் நிதியை, ரயில்வே துறைக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்கி உள்ளனர். இருப்பினும் இன்னும் பணிகள் துவங்க வில்லை. இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொளவாய் ஏரி சீரமைப்பு பணிகளுக்கு, பொதுப்பணித்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 4.53 கோடி ரூபாய் ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டும், அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது. அடுத்தாண்டு ஜனவரியில் ஏரி நீரை வெளியேற்றும் பணி துவங்கும். அடுத்தடுத்து பணி விரைவாக நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர். செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் விடுமுறை நாட்களை குடும்பத்துடன் கழிக்க பொழுது போக்கு தலங்கள் இல்லை. சென்னை, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. பயண நேரம் அதிகமாக உள்ளதால், விடுமுறை தினம் பயணத்திலேயே தீர்ந்து விடுகிறது. கொளவாய் ஏரியில் படகு விடப்படும் என அறிவிப்பு வெளியானது போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இதுவரை பணிகள் நிறைவடையவில்லை. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, ஏரியை சீரமைக்க வேண்டும். - ஆ.ஜனனி, தனியார் நிறுவன ஊழியர், சிங்கபெருமாள் கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை