சென்னை: ''பிரதமரின் நடவடிக்கையால், நம் நாட்டின் சினிமா துறை அபார வளர்ச்சியை அடைந்துள்ளது,'' என, சர்வதேச சமஸ்கிருத குறும்பட திருவிழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார்.சமஸ்கிருதம் பாரதி சார்பில், ஐந்தாவது சர்வதேச சமஸ்கிருத குறும்படத் திருவிழா நடத்தப்பட்டது.இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து, 120 குறும்படங்கள் அனுப்பப்பட்டு, தேர்வுக் குழுவினரால் 36 படங்கள் தேர்வு செய்யப்பட்டன.இதில், சிறந்த மூன்று படங்களுக்கான விருது வழங்கும் விழா, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில், நேற்று நடந்தது.விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று, குறும்படங்களை பார்வையிட்டார். அத்துடன், படங்களுக்கான சிறந்த நடிகர், இசை உள்ளிட்ட, 11 கலைஞர்களை பாராட்டி, சான்றிதழை வழங்கி பேசியதாவது:சமஸ்கிருதம் ஒரு சிறந்த மொழி; இதை ஊக்கப்படுத்தும் வகையில், குறும்பட போட்டிகள் நடந்தது வரவேற்கத்தக்கது.நம் நாட்டின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், பல படங்களை தயாரிக்க வேண்டும் என, இளைஞர்களிடம் கோரிக்கை வைக்கிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகள், இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும்.பிரதமர் மோடியின் நடவடிக்கையால், நம் நாட்டின் சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறை, அபார வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் காரணமாக, சினிமா துறையின் 'போஸ்ட் புரொடக் ஷன்' பணிகள், சென்னை மற்றும் பெங்களூரில் நடப்பது, நாட்டிற்கு பெருமை.மும்பையில் ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, ஏ.வி.ஜி.எஸ்.,காக மையம் திறந்துள்ளோம். அனைவரும், கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட திருவிழாவில் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, குறும்படங்கள் குறித்தும், சிறந்த தொழில்நுட்பத்தில் வடிவமைத்த இளைஞர்களை பாராட்டியும் பேசினார்.தொடர்ந்து, முறையே முதல் மூன்று இடங்களை பிடித்த, 'சாஸ்வதம், ருணம், அக்னிகனாஹா' ஆகிய குறும்படங்களுக்கு, விருதுகளை வழங்கி கவுரவித்தார்.நிகழ்வில், சமஸ்கிருதம் பாரதியின் அகில இந்திய பொதுச்செயலர் சத்தியநாராயணன் பட், அமெரிக்க தலைவர் நடேச ஜானகிராமன், தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.