எரிவாயு தகன மேடை பகுதியில் தண்ணீர் வசதியின்றி அவதி
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் நவீன எரிவாயு தகன மேடை பகுதியில், தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அச்சிறுபாக்கம் பேரூராட்சியில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில், 2023ம் ஆண்டு, 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் கூடிய எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தண்ணீர் வசதிக்காக, அங்கிருந்த பழைய ஆழ்துளை கிணற்றில் மோட்டார் பொருத்தி, தண்ணீர் வசதி செய்யப்பட்டது. ஆனால், ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் வற்றியுள்ளதால், தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இந்த நவீன எரிவாயு தகன மேடை வளாகத்தில் தண்ணீர் வசதியில்லாததால், ஈமச்சடங்கு செய்ய வருவோர் சிரமப்படுகின்றனர். உடல்களை புதைக்கவும், எரியூட்டவும் கொண்டு வரும் மக்கள், வீடுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டிய அவல நிலை தொடர்கிறது. இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டாரும் பழுதடைந்து உள்ளதால், அதை பழுது நீக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்த வேண்டும். இதுகுறித்து கலெக்டர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர்,ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.