திருப்போரூர்:திருப்போரூரிலிருந்து செம்பாக்கம், முள்ளிப்பாக்கம், மானாமதி உள்ளிட்ட பல கிராமங்களை இணைத்து, அவற்றின் வழியாக திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற பிரதான பகுதிகளுக்கு பேருந்து இயக்க வேண்டும் என, கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.இந்த கோரிக்கையை ஏற்று, புதிய தடம் எண்: '50எஸ்' என்ற பேருந்து சேவையை பல கிராமங்களை இணைக்கும் வகையில் இயக்க, போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொண்டது.இதையடுத்து, இதற்கான சேவை துவக்க விழா, நேற்று திருப்போரூர் பேருந்து நிலையத்தில் நடந்தது.செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் வி.சி. - எம்.எல்.ஏ. பாலாஜி ஆகியோர், புதிய பேருந்து சேவையை கொடியசைத்து துவங்கி வைத்தனர். பின், சிறிது துாரம் பேருந்தில் பயணம் செய்தனர்.அதேபோல், செங்கல்பட்டு,- திருக்கச்சூர், சாமியார் கேட் வழியாக, தாம்பரத்திற்கு தடம் எண் '82 டி' என்ற புதிய பேருந்து சேவையும் துவக்கப்பட்டது.இந்த பேருந்து, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து காலை 8:00 மணிக்கு புறப்பட்டு, திருக்கச்சூர், சாமியார் கேட் வழியாக, தாம்பரத்திற்கு காலை 9:15 மணிக்கு வந்தடையும். பின், மாலை 4:30 மணிக்கு செங்கல்பட்டில் புறப்பட்டு, தாம்பரத்திற்கு மாலை 5:45 மணிக்கு வந்தடையும்.சித்தாமூர் அருகே உள்ள புத்தமங்கலம் கிராமத்தில் இருந்து, ஆயகுன்னம், அமணம்பாக்கம், அச்சிறுபாக்கம் வழியாக, மதுராந்தகத்திற்கு புதிய பேருந்து சேவையும் துவக்கி வைக்கப்பட்டது.நேற்று நடந்த துவக்க விழாவில், செய்யூர் வி.சி. - எம்.எல்.ஏ. பாபு, அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.