குறைந்த மின்னழுத்தம் பிரச்னை சிங்கபெருமாள்கோவிலில் அவதி
சிங்கபெருமாள் கோவில், சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில் சாய் விக்னேஷ் நகர், ஈஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குறைந்த மின் அழுத்தம் பிரச்னையால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள்கோவில் ஊராட்சி, 9வது வார்டில் உள்ள சாய் விக்னேஷ் நகர், ஈஸ்வரி நகர், அம்மா நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.புதிதாக, நிறைய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, சிங்கபெருமாள்கோவில் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து, சாலையோரங்களில் மின் கம்பங்கள் நடப்பட்டு, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதில் பல இடங்களில், குடியிருப்புகளுக்கு நடுவே செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக உள்ளன.மேலும், இந்த பகுதிகளில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு, வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகின்றன. இதனால், பகுதிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இந்த பகுதியில், மின் கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுகின்றன. கடந்த ஜன., மாதம் மின் கம்பி அறுந்து விழுந்து, அதை மிதித்த ஐந்து மாடுகள் உயிரிழந்தன.இதன் காரணமாக இந்த வழியாகச் செல்லும் மக்கள், விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர். இது குறித்து மின் வாரிய அலுவலகம், முதல்வர் தனிப்பிரிவுகளுக்கு புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மின் விபத்து ஏற்படும் முன், உரிய நடவடிக்கை எடுத்து, இந்த பகுதியில் குறைந்த மின்னழுத்தம் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.