மாமல்லபுரம்:மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர், பழைய மாமல்லபுரம் சாலை பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிக்கு செல்கின்றனர்.பல ஆண்டுகளுக்கு முன், கல்பாக்கம் - சென்னை கோயம்பேடு இடையே, பழைய மாமல்லபுரம் சாலை வழியே, தடம் எண் 119, மாமல்லபுரம் - பிராட்வே இடையே, தடம் எண் 519பி ஆகிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. அடையாறு - மாமல்லபுரம் இடையே, தடம் எண் 568 மாநகர் பேருந்து இயக்கப்பட்டது.மாமல்லபுரம் பகுதியினர், சிறுசேரி, நாவலுார், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று திரும்பினர். பல ஆண்டுகளுக்கு முன், இப்பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.தற்போது, மாமல்லபுரம் - தாம்பரம் மாநகர் பேருந்தில், கேளம்பாக்கம் வரை சென்று, பிற இடங்களுக்கு மற்றொரு பேருந்தில் செல்ல வேண்டும். இதனால், கூடுதல் கட்டணம், நேர விரயம், பேருந்திற்காக நீண்டநேரம் காத்திருப்பு என, கடுமையாக அவதிக்குள்ளாகின்றனர்.இதுகுறித்து, அதிகாரிகளிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் பலமுறை முறையிட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்துகின்றனர்.பயணியர் நலன் கருதி, இத்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை, மீண்டும் இயக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.