| ADDED : டிச 10, 2025 08:25 AM
மாமல்லபுரம்: தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் த.பாஸ்கரன், 61. இவர், மாமல்லபுரம் அரசு கட்டட, சிற்ப கலைக் கல்லுாரியில் கற்சிற்பக்கலை பட்டம் பெற்று, அதே கல்லுாரியில் விரிவுரையாளராக, நான்காண்டுகள் பணியாற்றினார். அதன் பின் பணியிலிருந்து விலகி, சிற்பக்கூடம் நடத்தி வருகிறார். விநாயகர் நடனமாடுவது, மேளம் இசைப்பது, கணினி பயன்படுத்துவது உள்ளிட்ட தோற்றங்களில் இவர் வடித்த அழகிய கற்சிலைகள், அயர்லாந்து நாட்டில் உள்ள,'விக்டர்ஸ் வே' என்ற பூங்காவில் இடம்பெற்று, சர்வதேச புகழ் பெற்றன. இவருக்கு, 2024ம் ஆண்டிற்கான தேசிய விருதை கிடைத்தது. இதையடுத்து, புதுடில்லியில் நேற்று நடந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, இவ்விருதை அவருக்கு வழங்கி கவுரவித்தார். இதுகுறித்து, பாஸ்கரன் கூறுகையில்,''சிவபெருமான் முயலகனை வதம் செய்யும் சதுர தாண்டவம் கற்சிலை வடித்தேன். அதற்கு, மத்திய அரசு தேசிய விருது வழங்கியுள்ளது. சிற்பக் கலைக்கான அங்கீகாரமாக, இந்த விருதை கருதுகிறேன்,'' என்றார்.