நடமாடும் பாஸ்போர்ட் சேவை அண்ணா பல்கலையில் துவக்கம்
சென்னை,அண்ணா பல்கலை வளாகத்தில், நடமாடும் பாஸ்போர்ட் சேவை நேற்று துவங்கியது. இந்த சேவையை மாணவர்கள் இன்றும் பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், கடந்த மாதம் நடமாடும் பாஸ்போர்ட் சேவை துவங்கியது. இந்த சேவை ஒரு வாரம் தொடர்ந்தது. இதில், 120க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர். அதைத்தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில், நேற்று, மாணவர்களுக்கான நடமாடும் பாஸ்போர்ட் சேவைக்கான வாகனம் நிறுத்தப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின், பாஸ்போர்ட் சேவா திட்ட இயக்குநர் கோவேந்தன், நடமாடும் பாஸ்போர்ட் சேவையை துவக்கி வைத்தார். உடன், சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பாஸ்போர்ட் பெற விரும்பும் மாணவ - மாணவியரின் தகவல்கள், டீன் ஒப்புதலுடன் பல்கலை வாயிலாக, பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. அதனால், முகவரி உள்ளிட்டவை குறித்த விசாரணை இல்லாமல், பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறைகள் தொடங்கின. இந்த நடமாடும் சேவை, இன்றும் தொடர்கிறது. இதன்வாயிலாக, ஒரு நாளைக்கு, 40 பேர் வரை பயனடைவர் என, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.