உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மகன் இறந்த துக்கத்தால் மனமுடைந்த தாய் மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மகன் இறந்த துக்கத்தால் மனமுடைந்த தாய் மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

அச்சிறுபாக்கம்: மகன் இறந்த துக்கம் தாளாமல் மனமுடைந்த தாய், தன் மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அச்சிறுபாக்கம் அருகே கொங்கரை மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 42; கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி, 36. இவர்களது மகள் பத்மாவதி, 14, மகன் புருஷோத்தமன், 11. நேற்று முன்தினம், கொங்கரை மாம்பட்டு திரவுபதி அம்மன் கோவில் பின்புறம் உள்ள குளத்தில் மூழ்கி, இவர்களது மகன் புருஷோத்தமன் உயிரிழந்தார். நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்று, அஸ்தியை கடலில் கரைக்க, புதுச்சேரிக்கு செந்தில்குமார் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில், மகன் இறந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த தாய் ஜெயலட்சுமி, மகள் பத்மாவதியை அழைத்துக் கொண்டு பேருந்தில், கொங்கரையில் இருந்து கரசங்கால் கிராம பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அங்கிருந்து, அருகிலுள்ள ரயில் தண்டவாளம் பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த நேரத்தில், திருப்பதியிலிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக விழுப்புரம் செல்லும் பாசஞ்சர் ரயில், கரசங்கால் பகுதியில் காலை 10:45 மணியளவில் வந்துள்ளது. அப்போது ஜெயலட்சுமி, மகள் பத்மாவதியுடன் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் ஒரத்தி போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மேலும் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ