செங்கை ஐந்து அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி மையம் துவக்கம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் ஐந்து இடங்களில், 'நீட்' தேர்வுக்கு பயிற்சி மையம், துவக்கப்பட்டது.செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 401 மாணவர்கள், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், செய்யூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகள், செங்கல்பட்டு, பல்லாவரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில், நீட் தேர்வுக்கு பயிற்சி மையம் அமைக்க, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். இதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐந்து பள்ளிகளில், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் நேற்று துவக்கப்பட்டன. இப்பயிற்சி, ஒரு மாதத்திற்கு நடக்கிறது.இந்த பயிற்சி மையங்கள், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமையில் செயல்படுகின்றன.செய்யூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நீட் தேர்வு பயிற்சி மையத்தில், மாணவியருக்கு, நீட் தேர்வுக்கான புத்தகங்களை, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், நேற்று வழங்கினார்.இந்த மையங்களில், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் வாயிலாக, பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும், பயிற்சி முடித்த பிறகு, சனிக்கிழமைதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.இதன் வாயிலாக, ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், மருத்துவ கனவை நனவாகிறது என, கல்வித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.