வாகன நிறுத்தங்கள் அமைக்க புதிய திட்டம் இ.சி.ஆரில் காலி நிலம் தேடும் அதிகாரிகள்
இ.சி.ஆர்., எனப்படும் கிழக்கு கடற்கரை சாலையில், வாகன நிறுத்தங்கள் அமைக்க, காலி நிலம் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் போக்குவரத்து சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில், ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, 'கும்டா' எனப்படும் போக்குவரத்து குழுமம் ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து சேவைகளுக்கு இடையிலான இடைவெளியை தவிர்ப்பதற்கான திட்டங்களை, இக்குழுமம் உருவாக்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக, வாகனங்கள் நிறுத்துமிடங்கள் விஷயத்தில், ஒழுங்குமுறையை ஏற்படுத்த, இக்குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, அண்ணா நகரில், 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில், இத்திட்டம் அமலுக்கு வரவுள்ள நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதியை ஏற்படுத்த, கும்டா திட்டமிட்டுள்ளது. சமீபத்தில், தலைமை செயலர் முருகானந்தம் தலைமையில் நடந்த கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை, உயர் கல்வித்துறை, கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கிழக்கு கடற்கரை சாலையில், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும். இதற்காக, சாலைகளுக்கு அப்பால் காலி இடங்களை வாகன நிறுத்துமிடங்களாக மாற்ற வலியுறுத்தப்பட்டது. இதற்கான வாகன நிறுத்துமிடங்கள் ஒழுங்குபடுத்தும் புதிய திட்டத்தை, கும்டா வாயிலாக செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இப்பகுதியில், தங்களிடம் உள்ள காலி நிலங்கள் குறித்த விபரங்களை தெரிவிக்குமாறு, ஹிந்து சமய அறநிலையத்துறையை தலைமை செயலர் அறிவுறுத்தியுள்ளார். இதே போல், பாலவாக்கத்தில் உள்ள சென்னை பல்கலையின் காலி நிலத்தை பெறவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வருவாய் துறை வசம் உள்ள நிலங்கள் குறித்த விபரங்கள், கலெக்டரிடம் கேட்கப்பட்டுள்ளது. இத்துடன், சாலைகளுக்கு அப்பால் உள்ள காலி நிலங்கள் பற்றிய விபரத்தை அளிக்குமாறு, நெடுஞ்சாலை துறையிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற துறைகளை அணுகி, காலி நிலங்கள் குறித்த விபரங்களை பெற்று, நான்கு வாரங்களில் இதற்கான வரைவு திட்டத்தை உருவாக்க, கும்டாவுக்கு தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். - நமது நிருபர் -