உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேலும் 6 இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவு

மேலும் 6 இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவு

செங்கல்பட்டு:சொர்ணவாரி பருவத்திற்கு, கூடுதலாக ஆறு இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க, கலெக்டர் சினேகா, நேற்று உத்தரவிட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில், 35,068 ஏக்கருக்கு நெல் நடவு செய்யப்பட்டது. தற்போது, ஒரு சில இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கவும், விவசாயிகளிடருந்து நெல் கொள்முதல் செய்யவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை, 71 இடங்களில், நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கி, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் திருக்கழுக்குன்றம், காட்டாங்கொளத்துார், அச்சிறுபாக்கம் ஆகிய வட்டாரங்களில், நெல் அறுவடைக்கு தயாராக உள்ளதால், நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன் பின் திருக்கழுக்குன்றம், காட்டாங்கொளத்துார், அச்சிறுபாக்கம் ஆகிய வட்டாரங்களில் கூடுதலாக ஆறு இடங்களில், தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க, கலெக்டர் சினேகா நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, திருக்கழுக்குன்றம் அடுத்த லட்டூர் கிராமத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக, ஒரு நெல் கொள்முதல் நிலையம் துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், பொன்விளைந்தகளத்துார் அடுத்த மோசிவாக்கம், பாலுார் அடுத்த சாஸ்திரம்பாக்கம், செங்கல்பட்டு அடுத்த திருவடிசூலம், அச்சிறுபாக்கம் அடுத்த ஆனைக்குன்னம் (பொற்பரங்கரனை), எல்.எண்டத்துார் அடுத்த தண்டரை புதுச்சேரி ஆகிய ஐந்து இடங்களில், நெல் கொள்முதல் நிலையம் துவக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ