நடைமேடையில் டூ-வீலர்கள் பார்க்கிங் கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் அவதி
கூடுவாங்சேரி, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில், நடை மேடையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால், பயணியர் சிரமப்படுகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, ஜி.எஸ்.டி., சாலை ஓரம், 100 'சென்ட்' பரப்பில், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.இங்கிருந்து கோயம்பேடு, சோழிங்கநல்லுார், திருப்போரூர், பூந்தமல்லி, திருவான்மியூர், கீரப்பாக்கம், வடபழனி, திருவான்மியூர், பிராட்வே, தி.நகர், நங்கநல்லுார், பொழிச்சநல்லுார் ஆகிய இடங்களுக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பேருந்து நிலையம் உள்ளே, இருசக்கர வாகனங்களை நிறுத்தும் இடம் தனியாக உள்ளது. ஆனால், அங்கு வாகனங்களை நிறுத்தாமல், பயணியர் ஓய்வறை அருகே, நடைமேடையில் பலர் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.இதனால், பயணியர் நடைமேடையை விட்டு கீழே இறங்கி நடக்கும் சூழல் உள்ளது. தவிர, பேருந்துகளை நிறுத்துவதற்கும், நடை மேடையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் இடையூறாக உள்ளன.எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், நடைமேடைகளை பயணியர் பயன்படுத்தும்படி, அவ்விடத்தில் எவரும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தாதபடி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.