திருப்போரூரில் வி.சி., கொடிகம்பம் அகற்றம் அதிகாரிகளுடன் கட்சியினர் வாக்குவாதம்
திருப்போரூர்:திருப்போரூரில் முன் அறிவிப்பு இன்றியும், கால அவகாசம் வழங்காமலும் வி.சி., கொடிக்கம்பத்தை அகற்றியதாக கூறி இளைஞர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான பொது இடங்களில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், ஜாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் உள்ளன. இந்த கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுக்கா பகுதிகளில் கொடிகம்பங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதில், திருப்போரூர் பேரூராட்சி, 15 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வி.சி., கொடிக்கம்பம் கல்வெட்டு கட்டடத்துடன் இருந்தது. நேற்று நெடுஞ்சாலைத்துறை திருப்போரூர் பிரிவு உதவி பொறியாளர் அரவிந்த்ெgபொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றினார்.இதை அறிந்த அப்பகுதி வி.சி., கட்சி இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த திருப்போரூர் தாசில்தார் சரவணன், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.அதிகாரிகளிடம், பார்வேந்தன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கொடிக்கம்பம் அகற்றுவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில்எவ்வித தகவலும் முன் அறிவிப்பும் இன்றி தான்தோன்றித்தனமாக கொடிக்கம்பம் அகற்றப்பட்டுள்ளது. பத்து நிமிடம் எங்களுக்கு அவகாசம் கொடுத்திருந்தால் நாங்களே கழற்றி கொடிக்கம்பத்தை இறக்கி இருப்போம். பேருந்து நிலையம், சட்டசபை உறுப்பினர் அலுவலகம், கோவில் போன்ற இடங்களில் இப்போதும் மற்ற கட்சிகளின் கொடிக்கம்பங்கள் பறந்து கொண்டுதான் இருக்கிறது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நினைக்கும் அதிகாரிகள், இதே வேகத்தில் பஞ்சமி நிலங்களையும் மீட்க நடவடிக்கை எடுப்பார்களா என இளைஞர்கள் தாசில்தாரிடம் கேள்வி எழுப்பி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, போலீசார் மற்றும் தாசில்தார் இளைஞர்களிடம் சமரசம் பேசி கூட்டத்தை கலைத்தனர். இதுதொடர்பாக வி.சி., கட்சியினர் திருப்போரூர் காவல் நிலையம் சென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மற்றும் பொக்லைன் இயந்திர ஓட்டுநர் மீது புகார் அளித்தனர்.