மின் இணைப்பை துண்டிக்க சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்
மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திம்மாவரம் ஊராட்சி அம்பேத்கர் நகரில், அரசுக்கு சொந்தமான இடத்தில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த திம்மாவரம் ஊராட்சி மன்ற தலைவர் நீலமேகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்தார். இதற்கு தனிநபர் பெயர் சூட்டி திறப்பு விழா நடத்தியதாக, திம்மாவரம் தி.மு.க., கவுன்சிலர் அருள்தேவி நேற்று முன்தினம், காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.இதையடுத்து நேற்று காலை, வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா தலைமையில் அரசு அதிகாரிகள், சுத்திகரிப்பு நிலைய மின் இணைப்பை துண்டிக்க சென்றனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், மின் இணைப்பை துண்டிக்க கூடாது எனக் கூறி, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.தொடர்ந்து அவர்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வேண்டும்; மின் இணைப்பை துண்டிக்க கூடாது என, அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். செங்கல்பட்டு தாலுகா போலீசார் பேச்சு நடத்தியதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.