நேர்கல் தடுப்பு அமைக்க முதல்வரிடம் மனு
மாமல்லபுரம் : மாமல்லபுரம் பேரூராட்சியைச் சேர்ந்த தேவனேரி, பட்டிபுலம் ஊராட்சியைச் சேர்ந்த புதிய எடையூர் ஆகிய மீனவ பகுதிகள், அருகருகே உள்ளன.இப்பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், ஒவ்வொரு ஆண்டும் கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, மீன்பிடி படகுகள் மற்றும் வலைகள் ஆகியவற்றை, பாதுகாப்பாக வைக்க இடமில்லை.வடகிழக்கு பருவமழை காலத்தில், கடலரிப்பு அதிகரித்து கடற்கரை முற்றிலும் அழிந்து, கடல்நீர் நிலப்பகுதியிலும் புகுந்து விடுகிறது. இதனால், வசிப்பிடம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.இப்பகுதிகளில் கடலரிப்பை தடுத்து, கடற்கரை அழியாமல் பாதுகாக்க, நேர்கல் தடுப்பு அமைக்க கோரி, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.அந்த வகையில் நேற்று, விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட, கடலோர சாலை வழியே சென்ற முதல்வர் ஸ்டாலினிடம், இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.