குழாய் இணைப்புகள் உடைந்து மறைமலைநகரில் குடிநீர் வீண்
மறைமலை நகர்,:மறைமலை நகர் நகராட்சி, 10வது வார்டு, கூடலுார் ஏரியில், திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டு, குழாய்கள் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு, 15வது வார்டு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதற்காக, அண்ணா சாலை ஓரம், நகராட்சி சார்பில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், நேற்று காலை அண்ணா சாலை - காமராஜர் சாலை சந்திப்பு பகுதியில், பூமிக்கு அடியில் செல்லும் குழாய் இணைப்புகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், தண்ணீர் வெளியேறி அண்ணா சாலையில் வழிந்து ஓடியது.இது குறித்து, அப்பகுதிவாசிகள் மறைமலை நகர் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தண்ணீர் செல்லும் குழாய் வால்வுகளை அடைத்து, நகராட்சி ஊழியர்கள் தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர்.இதே போல், 19வது வார்டு ஈஸ்வரன் நகரில், நேற்று முன்தினம் குழாய் உடைந்ததால், இரண்டு நாட்களாக தண்ணீர் வரவில்லை. எனவே, உடைந்த குழாய் இணைப்புகளை சரி செய்து தர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.