போலியோ சொட்டு மருந்து வரும் 12ம் தேதி முகாம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், வரும் 12ம் தேதி, போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. கலெக்டர் சினேகா அறிக்கை: 'போலியோ' எனும் இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்க, கடந்த 26 ஆண்டுகளாக, ஐந்து வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், வரும் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஒரு முறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடக்கிறது. மாவட்டத்தில், 1,522 மையங்களில், 2 லட்சத்து 38 ஆயிரத்து 231 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர நலவாழ்வு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில், போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். வெளிமாநில பணியாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, அவர்களுக்கும் 26 சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு, போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது . இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.