செம்பூர், நந்திவரம் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட பூஜை
கூவத்துார்:செம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு, 55 லட்சம் ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறை கட்டட கட்டுமானம், பூமிபூஜையுடன் துவக்க பட்டது.கூவத்துார் அடுத்த, செம்பூரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்குகிறது. செம்பூர் மற்றும் சுற்றுபுற பகுதியினர் பயில்கின்றனர். இப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டடம் இல்லாமல், மாணவ - மாணவியர் சிரமப்பட்டனர். கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட, பெற்றோர் அரசிடம் வலியுறுத்தினர். மாவட்ட நிர்வாகம், சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம், சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் கட்டடம் கட்ட பரிந்துரைத்தது. இதையடுத்து, நிலைய நிர்வாகம், இரண்டு வகுப்பறை கட்டடம் கட்ட, 55 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. அதன் இயக்குனர் சேஷையா, நேற்று, பூமிபூஜையுடன் கட்டுமானப் பணிகளை துவக்கினார். சமூக பொறுப்புக்குழு உறுப்பினர் செயலர் ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* நந்திவரம் நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 2500 க்கும்மேற்பட்ட, மாணவிகள் படித்து வருகின்றனர்.இங்கு படித்து வரும் மாணவிகளுக்கு ,போதிய இடவசதி இல்லாததால், கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு, பொதுப்பணித்துறை சார்பில் 1.10 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் அமைக்கும் பணிக்கு,நேற்று பூமி பூஜை நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக், துணைத் தலைவர் லோகநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.