மாமல்லபுரம்,:சென்னை, எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கல்வி நிறுவனம், மத்திய கல்வி அமைச்சகத்தின் உறுதுணையுடன், பல்கலைக்கழகங்களுக்கு சர்வதேச தரவரிசை வழங்கும் 'குவாக்கரெல்லி சைமன்ட்ஸ்' அமைப்பின் கியூ.எஸ்., இந்தியா 2024 கருத்தரங்கை, மாமல்லபுரத்தில் நேற்று நடத்தியது.தமிழக கவர்னர் ரவி தலைமை வகித்தார். பல்கலைக்கழகங்களுக்கு தரவரிசை சான்றளித்து, அவர் பேசியதாவது:இந்த கருத்தரங்கில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பண்டைய கலாசாரம் மிக்க மாமல்லபுரத்தில் நடப்பதும் சிறப்பு. நம் நாடு அறிவுத்திறன் நாடாக உள்ளதில், சந்தேகமே இல்லை.சர்வதேச தர கல்வி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இளைஞர்கள், உயர் கல்வியாளர்கள் மிகுந்து வருகின்றனர். வருங்காலத்தில், இந்தியா அறிவுத்திறன், புதிய கண்டுபிடிப்புகளில் சர்வதேச சிறப்பிடமாக திகழும்.இந்நாடு, 6,000 ஆண்டுகளுக்கு முன், வேத காலத்திலேயே கல்வியறிவுடன் விளங்கியது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பே, நாளந்தா பல்கலைக்கழகம் இயங்கியது.இப்பகுதி மன்னன், அங்கு பயின்று, சீன நாட்டில் புத்த மதத்தை பரப்பிய சரித்திரமும் உள்ளது. அவரது நினைவுகள், நம் முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாகவும் உள்ளது.அக்காலத்தில், ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் இல்லை. வேத கூற்றுப்படி, நாம் தான் பிறருக்கும் கல்வி அளித்துள்ளோம். கிராமப் புறங்களிலும் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில், 25 கோடி குடும்பங்களை, வறுமைக்கோட்டிலிருந்து மீட்டுள்ளோம். பல்கலைக்கழகங்களின் வேந்தராக, நானும் உள்ளேன். கல்வியாளர்கள் இணைந்து, பாரதத்திற்கும், உலகிற்கும் முன்னேற்றம் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என, எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், கியூ.எஸ்., அமைப்பின் முதன்மை செயல் அலுவலர் ஜெஸிகா டர்னர் மற்றும் பிற நிர்வாகிகள், எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கல்வி நிறுவன புரோ சான்சலர் சத்யநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.