மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டுகோள்
செங்கல்பட்டு:விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டுமென, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. கலெக்டர் சினேகா அறிக்கை: தீபாவளி பண்டிகைக்கு மக்கள், குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், மக்கள் திறந்தவெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த தீபாவளியை மாசற்ற தீபாவளியாக மாற்ற, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.