சூணாம்பேடு ஆரவல்லி நகரில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
சூணாம்பேடு, சூணாம்பேடு ஆரவல்லி நகரில், வடிகால்வாய் வசதி இல்லாததால், சாலையில் மழைநீர் தேங்கி, அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆரவல்லி நகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழைநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு, சூணாம்பேடு - தொழுப்பேடு நெடுஞ்சாலையில் தேங்குகிறது. மேலும், சாலை சகதியாக மாறி போக்குவரத்து பாதிக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆரவல்லி நகர் பகுதியில் சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.