சாலையோர பனை மரங்களில் ரிப்ளக்டர் பொருத்த கோரிக்கை
வண்டலுார், வண்டலுார் -- கேளம்பாக்கம் இடையிலான வழித்தடத்தில், சாலையோரம் உள்ள பனைமரங்களில், 'ரிப்ளக்டர்' எனும் சிவப்பு ஒளிர்வான் பொருத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.வண்டலுார் -- கேளம்பாக்கம் இடையிலான 20 கி.மீ., சாலையில், நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆனால், போக்குவரத்திற்கு ஏற்ப சாலையின் அகலம் இல்லை.பல இடங்களில் சாலை விரிந்தும், சுருங்கியும் உள்ள நிலையில், சாலையோரம் உள்ள பனைமரங்களும், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பனைமரங்களில் சிவப்பு ஒளிர்வான் எனும்,'ரிப்ளக்டர்'கள் பொருத்த வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த வழித்தடத்தில், 100க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இரவு நேரத்தில் வெளிச்சம் குறைபாடு காரணமாக, பனைமரங்கள் கண்களுக்கு சரியாக தெரிவதில்லை.எனவே, கவனக் குறைவாக பனை மரங்களின் மீது வாகனங்கள் மோதி, பெரும் விபத்து நிகழ வாய்ப்பு உள்ளது.தவிர, பட்டுப்போன பனை மரங்கள் காற்றில் சாய்ந்து, கீழே விழுந்து விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.எனவே, வாகன ஓட்டிகளுக்கு புலப்படும் விதமாக பகலிலும், இரவிலும் மின்னக்கூடிய சிவப்பு ஒளிர்வான்களை பனைமரங்களில் பொருத்தவும், பட்டுப்போன மரங்களை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.