| ADDED : நவ 19, 2025 05:12 AM
செய்யூர்: வேம்பனுார் கிராமத்தில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூர் அடுத்த இடைக் கழிநாடு பேரூராட் சிக்கு உட்பட்ட வேம்பனுார் - காசிபாட்டை சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு செல்லும் தண்டுமாரியம்மன் கோவில் சாலை உள்ளது. சாலையில் இருசக்கர வாகனம், கார், லாரி என ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கடந்த 15 ஆண்டுகளாக சாலை சேதமடைந்து ஜல்லி பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் ஏற்பட்டு உள்ள பள்ளத்தால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் மக்கள் பழுதடைந்த சாலையில் சென்றுவர சிரமப்படுகின்றனர். எனவே பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.