உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடப்பாக்கத்தில் கூடுதலாக வங்கி கிளை அமைக்க கோரிக்கை

கடப்பாக்கத்தில் கூடுதலாக வங்கி கிளை அமைக்க கோரிக்கை

செய்யூர்:கடப்பாக்கத்தில் கூடுதலாக தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 9,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடப்பாக்கம் பகுதியில் ஆலம்பரைக்குப்பம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், இந்தியன் வங்கி செயல்படுகிறது. கடப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான ஆலம்பரைக்குப்பம், கப்பிவாக்கம், வேம்பனுார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இதுவே பிரதான வங்கி. தற்போது இந்த வங்கியில் 15,000க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் உள்ளன. இதனால், தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்து செல்கின்றனர். இந்த ஒரு வங்கியில் ஓய்வூதிய திட்ட பணம், முதியவர் பென்ஷன் பணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு அதிகமானோர் குவிவதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள் மற்றும் முதியவர்கள் அவதிப் படுகின்றனர். மேலும் அவசர பண பரிவர்த்தனை தேவைக்காக வங்கிக்கு வருபவர்கள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் நலன் கருதி, கடப்பாக்கம் பகுதியில் மேலும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி