கீழக்கரணையில் ஏ.டி.எம்., மையம் திறக்க பகுதிவாசிகள் வேண்டுகோள்
மறைமலைநகர், மறைமலைநகர் நகராட்சி, கீழக்கரணை பகுதியில் 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் ஏ.டி.எம்., மையங்கள் இல்லாததால், பகுதிவாசிகள் நீண்ட துாரம் சென்று பணம் எடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:கீழக்கரணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரிய செங்குன்றம், மெல்ரோசாபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வாடகைக்கு தங்கி, அங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.இந்த பகுதியில், எந்த வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரங்களும் இல்லை. இதனால் பணம் எடுக்க சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் என, 5 கி.மீ., துாரம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.இதனால் ஓய்வூதிய தொகை பெறுவோர், பெண்கள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, இந்த பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.