உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடம்பாடி சுற்றுலா விடுதிக்கு இடம் வழங்க வருவாய் துறை பரிசீலனை

கடம்பாடி சுற்றுலா விடுதிக்கு இடம் வழங்க வருவாய் துறை பரிசீலனை

மாமல்லபுரம்: பல்லவர் கால பாறை சிற்பங்கள் அமைந்துள்ள மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய சுற்றுலா இடமாக விளங்குகிறது. பயணியர் தேவைக்காக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், இங்கு கடற்கரை விடுதி இயங்குகிறது. இதே கழகம், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பில் பாரம்பரிய, கலாசார, சுற்றுச்சூழல் பூங்காவை தற்போது அமைக்க உள்ளது. இச்சூழலில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுற்றுலா மேம்பாடு கருதி, பயணியர் தங்கும் விடுதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 30 ஏக்கர் இடத்தை வருவாய்த் துறையிடம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாகம் கேட்டுள்ளது. சென்னை - புதுச்சேரி முந்தைய கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரம் - புதுச்சேரி பகுதியை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி, நான்குவழிப் பாதையாக தற்போது மேம்படுத்தப்படுகிறது. மாமல்லபுரத்திலிருந்து 5 கி.மீ., தொலைவிலுள்ள கடம்பாடி பகுதியில், இச்சாலையை ஒட்டியுள்ள தரிசு புறம்போக்கு நிலத்தை இத்திட்டத்திற்கு வழங்க, வருவாய்த்துறை பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் விரைவில், அங்கு ஆய்வு செய்வார் எனத் தெரிகிறது. வருவாய்த் துறையினரும், இது பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தனர். அங்கு சாலையின் மேற்கு பகுதியில், தி.மு.க.,வின் தலைமை அலுவலக கட்டடம் உருவாகி வரும் நிலையில், அதன் எதிர்புறத்தில், சாலையின் கிழக்கு பகுதியில், சுற்றுலாத்துறைக்கு பரிசீலிக்கப்படும் இந்த இடம் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை