உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல் குவாரி லாரிகளால் சாலை சேதம்: புழுதி பறப்பதால் அவதி

கல் குவாரி லாரிகளால் சாலை சேதம்: புழுதி பறப்பதால் அவதி

சித்தாமூர்:அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கல் குவாரி லாரிகளால், கொளத்துார் கிராமத்திற்குச் செல்லும் சாலை சேதமடைந்து புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சித்தாமூர் அருகே, மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாமூர் கிராமத்தில், ரோட்டுக்கடை பகுதியில் இருந்து கொளத்துார் செல்லும் தார்ச்சாலை உள்ளது. கொளத்துார், பெருவெளி, நல்லாமூர், கோட்டிவாக்கம் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலையாக, இச்சாலை உள்ளது. கொளத்துார் பகுதியில் செயல்படும் கல் குவாரிக்கு, இந்த சாலையில் தினமும் ஏராளமான லாரிகள் அதிக பாரம் ஏற்றிச் செல்கின்றன. இதனால், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டும், தார் பெயர்ந்தும், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சாலை சேதமடைந்துள்ளது. இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர், தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். அத்துடன், கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையே தெரியாத அளவிற்கு புழுதி பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ