மீனவ பகுதிகள் சாலை சீரழிவு: கடலுார் ஊராட்சியில் அவதி
கூவத்துார்: கடலுார் ஊராட்சியில், மீனவ பகுதிகளை இணைக் கும் சாலை சேதமடைந்துள்ளதால், மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியில் சின்ன குப்பம், பெரியகுப்பம் ஆகிய மீனவ பகுதிகள் உள்ளன. இரண்டு பகுதி மீனவர்களும், பல்வேறு தேவைகளுக்கு, ஒரு குப்பத்தில் இருந்து மற்றொரு குப்பத்திற்குச் செல்கின்றனர். சின்னகுப்பம் மாணவ - மாணவியர் கல்வி பயில்வதற்காக, பெரியகுப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு செல்கின்றனர். இரண்டு பகுதிகளையும் இணைக்கும் சாலை, பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும், அபாய பள்ளங்கள் ஏற்பட்டும் சீரழிந்துள்ளது. நடந்து செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப் படுகின்றனர். புதிய தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தியும், லத்துார் வட்டார வளர்ச்சி நிர்வாகம் அலட்சியப்படுத்துவதாக, இப்பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென, இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.