ஏரிக்கரை உடைப்பை தடுக்க மணல் மூட்டை அடுக்கும் பணி
செய்யூர்:சித்தாமூர் அருகே காட்டுதேவாத்துார் கிராமத்தில், 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.கடந்த ஆண்டு பருவமழையில், ஏரி முழு கொள்ளளவை எட்டியபோது, மதகுப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, கரை உடைந்தது. பின், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மரக்கட்டைகள் மற்றும் மணல் மூட்டைகள் அடுக்கி, மதகு பகுதியை சீரமைத்தனர்.தற்போது, இந்த ஆண்டு பருவமழை தீவிரமடைந்து, ஏரிகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், ஏரிக்கரைகள் உடைவதை தடுக்க, பொதுப்பணித் துறை சார்பாக, பலவீனமான ஏரிக்கரைகள், சேதமடைந்த மதகுப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.அவ்விடங்களில், மணல் மூட்டைகள் மற்றும் மரக்கட்டைகள் கொண்டு, சூணாம்பேடு, பெரும்பாக்கம், நீலமங்கலம் மற்றும் காட்டுதேவாத்துார் உள்ளிட்ட ஏரிக்கரைகளை சீரமைக்கும் பணியில், பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.