தரிசு நிலத்தை பண்படுத்தி நட்ட மரக்கன்றுகள் வீண்: மீண்டும் நிலங்கள் தரிசாக மாறியதால் அதிருப்தி
மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை பகுதியில், தரிசு நிலங்களை பயிர் சாகுபடி செய்யும் வகையில் மாற்றும் நோக்கில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழ மரக்கன்றுகள் நடப்பட்டன. அதிகாரிகள், விவசாயிகள் கண்காணிப்பு இல்லாததால், இந்த மரக்கன்றுகள் காய்ந்து, மீண்டும் தரிசு நிலங்களாக மாறியதால், அரசு பணம் வீணாகி உள்ளது.புதிய நீராதாரங்களை உருவாக்கி, தரிசு நிலங்களை சாகுபடிக்கேற்ற நிலங்களாக மாற்றி, சாகுபடி பரப்பை அதிகரிக்க, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.உழவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர், முன்னோடி விவசாயிகள் மற்றும் இதர துறை அலுவலர்களை கலந்தாலோசித்து, தொகுப்பாக 10 முதல் 15 ஏக்கர் வரை உள்ள தரிசு நிலங்கள், சர்வே எண் வாரியாக கண்டறியப்படும்.இதில், 10 ஏக்கருக்கு குறைவான தரிசு நிலங்களை தனியாக கணக்கெடுத்து, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும்.பாசன ஆதாரத்திற்காக தரிசு நிலத்திலோ அல்லது அதன் அருகிலுள்ள புறம்போக்கு நிலத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து, பாசன நீர் இரைப்பதற்கு சூரிய மின்சக்தி மற்றும் மின்சக்தி வாயிலாக இயக்கப்படும் மோட்டார் பொருத்தப்படும்.இந்த தொகுப்பு நிலங்களில், விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் தரக்கூடிய வகையில், குறைந்த நீரில் அதிக வருமானம் தரக்கூடிய தோட்டக்கலை பழ மரக்கன்றுகள் நடப்படுகின்றன.இந்த பணியில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை துறைகள் ஈடுபடுகின்றன.அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், புக்கத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட கோடி தண்டலம் கிராமத்தில், ஒரே பகுதியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட விவசாயிகளின் ஏழு ஏக்கர் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டன.அதன் பின், விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை, வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து, விவசாயிகளுக்கு நீண்ட நாள் பயன் தரக்கூடிய வகையில், பழ மரக்கன்றுகள் நடும் வகையில், மண் பரிசோதனை செய்யப்பட்டது.அதன்படி, 2021- - 22ம் ஆண்டில், அப்போதைய தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில், அப்போதைய செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில், வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள், கோடி தண்டலம் கிராமத்தில் மா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட 1,499 பழ மரக்கன்றுகளை நடவு செய்தனர்.இதற்காக, பல லட்சம் ரூபாய் செலவு செய்து, தரிசு நிலத்தில் இருந்த முட்புதர்களை வேருடன் அகற்றி, வேளாண் பொறியியல் துறையின் கீழ் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களால், தரிசு நிலங்கள் சமன் செய்யப்பட்டன.பின் தரிசு நிலத்தை உழுது, ஆழ்துளைக்கிணறு அமைத்து, சோலார் மின் இணைப்பு மற்றும் சொட்டு நீர் பாசன வசதியும் ஏற்படுத்தி, இந்த பழ மரக்கன்றுகள் நடப்பட்டன.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பழ மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட பகுதி தற்போது, உரிய பராமரிப்பின்றி மீண்டும், ஆடு, மாடுகள் மேயும் தரிசு நிலமாக மாறி உள்ளது. மரக்கன்றுகள் காய்ந்து, வீணாகி உள்ளன.எனவே, கலெக்டர் உள்ளிட்ட வேளாண் துறை அதிகாரிகள், இப்பகுதியை ஆய்வு செய்து, மீண்டும் தரிசு நிலங்களை பயனுள்ள நிலங்களாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழ மரக்கன்றுகள் அமைக்கப்பட்ட பகுதியைச் சுற்றி, கம்பி வேலி ஏற்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:தரிசு நிலங்களில் நடப்பட்ட பழ மரக்கன்றுகள் காய்ந்து வீணானால், புதிதாக பழ மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்.தரிசு நிலங்களின் உரிமையாளர்களான விவசாயிகளிடம் ஒப்புதல் பெற்று, பழ மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.ஆனால், சென்னை போன்ற பகுதிகளுக்கு வேலைக்குச் சென்ற அவர்கள், அங்கேயே தங்கி விடுவதால், பராமரிப்பின்றி மரக்கன்றுகள் வீணாகி உள்ளன. இடம் தேர்வு செய்து பழ மரக்கன்றுகள் நடவு செய்வது மட்டுமே அதிகாரிகளின் பணி.பழ மரக்கன்றுகளை பராமரிப்பு செய்வது விவசாயிகளின் பொறுப்பு.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
வேதனை
தரிசு நிலத்தை பல லட்சம் ரூபாய் செலவு செய்து சீரமைத்து, பழ மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில், அவை பராமரிப்பின்றி மீண்டும் தரிசு நிலமாக மாறியுள்ளன. தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளின் போதிய வழிகாட்டுதல் இல்லாதது, அதிகாரிகளின் அலட்சியப் போக்கு உள்ளிட்ட காரணங்களால், அரசு பணம் வீணாகி உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.