கடல்நீரில் குடிநீர் உற்பத்தி குழாய்கள் மீனவ கடற்கரையில் ஒதுங்கி பரபரப்பு
மாமல்லபுரம்:பேரூர் கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலை திட்ட பணி குழாய்கள், மீனவ பகுதி கடற்கரையில் ஒதுங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது.சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சி, பேரூர் பகுதியில், கடல்நீரிலிருந்து நாள் ஒன்றுக்கு, 450 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்கிறது.தற்போது ஆலை கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.ஒப்பந்த நிறுவனம், ஆலைக்கு கடல்நீரை கொண்டுவரும் குழாய்களை, நவீன இயந்திரம் வாயிலாக கடலில் பதிக்கும் பணிகளை துவக்கியுள்ளது.இந்நிலையில், கடலில் குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால் குழாய்கள் மிதந்து கொண்டிருந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவில், கடல் நீரோட்ட மாற்றத்தால், குழாய்கள் அலையில் அடித்து வரப்பட்டு, ஆலை வளாகத்தை ஒட்டியுள்ள, நெம்மேலி மீனவ பகுதி கடற்கரையில் ஒதுங்கின.நேற்று காலை இதைப் பார்த்து, மீனவர்கள் அதிர்ந்தனர். மீன்பிடி தடைக்காலமாக இருப்பினும், கரையோரம் மீன் பிடிக்கும் தாங்கள், கடற்கரையில் தடையாக உள்ள குழாய்களால், படகுகளை செலுத்த முடியாமல், மீன்பிடித்தல் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து, ஆலை நிர்வாகத்திடம் இழப்பீடு கோரினர்.ஆலை நிர்வாகமும் இழப்பீடு அளிப்பதாக தெரிவித்ததால், மீனவர்கள் சமாதானம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து, ஆலை நிர்வாகம், 'புல்டோசர்'கள் வாயிலாக, குழாய்களை கடலுக்குள் உந்தி தள்ளும் பணியில் ஈடுபட்டு வருகிறது.