மேலும் செய்திகள்
ஆதிபராசக்தி பீடத்தில் கூட்டு வழிபாடு
21-Apr-2025
மேல்மருவத்துார் :மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி, உலக நன்மைக்காக நேற்று, வேள்வி பூஜை நடைபெற்றது.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மங்கள இசையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கும், பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கும், சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து, உலக நாடுகளில் பயங்கரவாத செயல்களின்றி, மக்கள் அமைதியுடன் வாழ, உலக அமைதி வேண்டியும், இயற்கை சீற்றம் தணியவும், இயற்கை வளம், மழை மற்றும் மக்கள் வளமுடன் வாழவும் வேண்டி, 1,008 யாக குண்டங்கள் அமைத்து, மஹா வேள்வி பூஜை நடந்தது.இதை சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் திருவுருவ சிலையை வணங்கி, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்.ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரயில்வே அதிகாரி செந்தில்குமார், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முன்னதாக, காஞ்சிபுரம் காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சரியார் வழங்கிய பிரசாதத்தை, ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாரிடம், சங்கரா கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் வழங்கினார்.தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்று, ஆதிபராசக்தி அம்மனை வணங்கினர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.யாக குண்டங்கள் மற்றும் வேள்வி பூஜை பொறுப்பை, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களின் இணைச் செயலர் ராஜேந்திரன் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை, தஞ்சாவூர் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் வாசன் மற்றும் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களின், ஆதிபராசக்தி மன்ற சக்திபீட நிர்வாகிகள் செய்திருந்தனர்.ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழாவை முதலில், பங்காரு அடிகளார் துவக்கிய போது, மழை பெய்தது. அதன் பின், நேற்று நடந்த சித்ரா பவுர்ணமி விழாவில், மழை பெய்த போது, பக்தர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர்.
21-Apr-2025