வாக்காளர் சிறப்பு முகாம் 27ம் தேதி துவக்கம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் சிறப்பு முகாம், நாளை மறுதினம் தேதி துவங்குகிறது. கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், வரும் 2026 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர், அதற்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் வரும் 27, 28ம் தேதிகளில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, சிறப்பு முகாம் நடக்கிறது. ஜன., 3, 4ம் தேதிகளிலும் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்., 17ல் வெளியிடப்பட உள்ளது.