தாம்பரம் மாநகராட்சி வார்டு சிறப்பு கூட்டம் அடுக்கடுக்கான புகார்களை அள்ளிவீசிய மக்கள்
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில், வார்டுகள் தோறும் நடந்த சிறப்பு கூட்டத்தில் நலச்சங்கத்தினர், மக்கள் பங்கேற்று, சாலை, குடிநீர், பாதாள சாக்கடை, தெரு மின் விளக்கு சரியில்லை என, அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர். தாம்பரம் மாநகராட்சி அடங்கிய 70 வார்டுகளில், மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, வார்டு அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்புடன், மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில், அந்தந்த வார்டுகளில் சிறப்பு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வார்டுகள் தோறும், அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில், நேற்று கூட்டம் நடத்தப்பட்டது. 65வது வார்டு சிறப்பு கூட்டம், சேலையூர் பாரதி பூங்காவில் நடந்தது. இதில், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், மக்கள் பங்கேற்று சாலைகளில் பாதாள சாக்கடை கழிவு ஓடுகிறது. திரும்பிய இடமெல்லாம் நாய் தொல்லை உள்ளது. பல தெருக்களில் சாலை போடவில்லை. குடிநீர் சரியாக வருவதில்லை. ஒவ்வொரு மழையிலும், அம்பேத்கர் நகர், லட்சுமி அவென்யூ பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தெரு மின் விளக்குகள் சரியாக எரியவில்லை. பூங்காக்கள் மேம்படுத்தப் படவில்லை. பாளையத்தான் மற்றும் நெல்லுார் அம்மன் கோவில் குளங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளன என்று அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர். அது தொடர்பாக, மனுக்களையும் கொடுத்தனர். மாநகராட்சி அதிகாரிகள் மனுக்களை பெற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றனர். 50வது வார்டு சிறப்பு கூட்டத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குடிநீர் குழாயை அகற்றி விட்டு, புதிய குழாய் பதித்தல். வள்ளுவர் குருகுலம் பள்ளி பின்புறத்தில் கடப்பேரி கிராமத்திற்கு சொந்தமான வண்டிபேட்டை வகைபாட்டை சேர்ந்த 64 சென்ட் நிலத்தில், விளையாட்டு திடல், பூங்கா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 55வது வார்டு சிறப்பு கூட்டத்தில், பாரதி நகர் 1-8 தெருக்களில் மழைநீர் வடியும் வகையில் கால்வாய் கட்ட வேண்டும். குட்வில் நகர், பாரதி நகர், மூவேந்தர் நகர், சுந்தர் நகர் பகுதிகளில் குழாய் அமைத்து, குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். கிஷ்கிந்தா சாலை வழியாக செல்லும் மாநகராட்சி கால்வாயை துார்வார வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்தனர்.