மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், மார்கழி அமாவாசையையொட்டி, ஆதிபராசக்தி அம்மனுக்கு நேற்று அதிகாலை 2:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, சிறப்பு யாகத்தை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.அதன்பின், யாகத்தில் ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த ஆண்டு, தைப்பூச ஜோதி இருமுடி விழா, கடந்த டிச., 1ம் தேதி துவங்கி, ஜன., 24ம் தேதி வரை நடக்கிறது. சித்தர் பீடத்தில், சுயம்பு அம்மனுக்கு தினமும் அபிஷேகம் செய்து, செவ்வாடை பக்தர்கள் இருமுடி செலுத்தி வருகின்றனர்.தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஏராளமான செவ்வாடை பக்தர்கள் இருமுடி அணிந்து வருகின்றனர்.இதேபோல், இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இதுவரை, 22 லட்சம் செவ்வாடை பக்தர்கள் இருமுடி செலுத்தியுள்ளனர்.வரும் 25ம் தேதி, ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரி மைதானத்தில் தைப்பூச ஜோதி விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.