உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா கோலாகலம்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா கோலாகலம்

மேல்மருவத்துார்:ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி விழா , கோலாகலமாக நடைபெற்றது.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி இருமுடி விழா, கடந்தாண்டு, டிச., 15ம் தேதி துவங்கி, கடந்த 10ம் தேதி வரை நடைபெற்றது.இதில், தமிழகம் மட்டுமின்றி கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்று, இருமுடி அணிந்து வந்து, ஆதிபராசக்தி அம்மனை வணங்கி, சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்தனர்.இதைத்தொடர்ந்து, தைப்பூச ஜோதி விழாவையொட்டி, மங்கள இசையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நேற்று நடைபெற்றது.அதன் பின், பங்காரு அடிகளார் இல்லத்தில் இருந்து, குரு ஜோதி ஊர்வலம் புறப்பட்டு, ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள தைப்பூச ஜோதி மேடைக்கு வந்தடைந்தது.பின், பங்காரு அடிகளார் உருவச்சிலையுடன், செவ்வாடை பக்தர்கள் மேடையில் வலம் வந்து ஒம் சக்தி, பராசக்தி என வாழ்த்து கோஷம் எழுப்பினர்.இதைத்தொடர்ந்து, தைப்பூச ஜோதியை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மைய இயக்குனர் ராஜராஜன், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், வருமான வரித்துறை துணை கமிஷனர் நந்தகுமார், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் தணிகாசலம், ராஜேஸ்வரன், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் ஏற்றினர்.உலகப்புகழ் 'ட்ரம்ஸ்' இசைக்கலைஞர் சிவமணி, புகழ்பெற்ற வயலின் கலைஞர் அபிஜித் பி.எஸ்.நாயர் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க, ஈரோடு மாவட்ட தலைவர் நடராஜன் மற்றும் இயக்க பொறுப்பாளர்கள், செவ்வாடை பக்தர்கள் செய்திருந்தனர். செங்கல்பட்டு எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி