| ADDED : டிச 04, 2025 02:22 AM
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அடுத்த களத்துாரில் சாலை வசதி இல்லாமல், கிராம மக்கள் தவித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட களத்துார் ஊராட்சியில், 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கீழ் அத்திவாக்கத்திலிருந்து கொங்கரை மாம்பட்டுச் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து, களத்துார் கிராமத்திற்குச் செல்லும் பிரதான சாலை உள்ளது. மண் சாலையாக உள்ள இந்த சாலை, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. நாளடைவில் இந்த சாலை கடுமையாக சேதமடைந்து உள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில், இந்த மண் சாலையில் மழைநீர் தேங்கி, மோசமான நிலையில் உள்ளது. இதனால், பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மண் சாலையாக உள்ள இந்த பிரதான சாலையை, கான்கிரீட் சாலையாக அமைத்து தர ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.