உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பயன்பாட்டிற்கு வராத கிளாம்பாக்கம் காவல் நிலையம் ... என்ன தான் ஆச்சு? : பணி முழுமையடையாமல் திறப்பு விழா நடத்தி குளறுபடி

பயன்பாட்டிற்கு வராத கிளாம்பாக்கம் காவல் நிலையம் ... என்ன தான் ஆச்சு? : பணி முழுமையடையாமல் திறப்பு விழா நடத்தி குளறுபடி

கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உள்ளே, 18.26 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, கடந்த மாதம் முதல்வரால் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் காவல் நிலைய புதிய கட்டடம், இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த புதிய கட்டடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்த பின், பேருந்து முனையம் உள்ளே, 2024 ஜனவரியில், புதிய காவல் நிலையம் துவக்கப்பட்டது. துரிதகதியில் துவக்கப்பட்டதால், கிளாம்பாக்கம் காவல் நிலையம் உரிய இட வசதியுடன் அமைக்கப்படவில்லை. இது குறித்து, காவல் துறை உயரதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்தன. எனவே, கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, காவல் துறை உயரதிகாரிகள் முடிவு எடுத்தனர். அதன்படி, 33,045 சதுர அடியில், மூன்று தளங்கள் உள்ள அதிநவீன காவல் நிலையம் அமைக்க, 11.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தொய்வு சி.எம்.டி.ஏ., வாயிலாக, 2024, செப்டம்பரில் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன. அதன் பின், கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்ததால், காவல் நிலைய கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால், கூடுதலாக 6.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, மொத்தம் 18.26 கோடி ரூபாயில், அனைத்து கட்டுமான பணிகளும் கடந்த ஜூலை மாதம் முடிந்தன. இதையடுத்து, கிளாம்பாக்கம் காவல் நிலையத் திற்கான புதிய கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆக., 5ம் தேதி,'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக திறந்து வைத்தார். காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலெட்சுமி பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். ஆனால், புதிய காவல் நிலைய கட்டடம் திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும், தற்போது வரை அது செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால், அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கிளாம்பாக்கம் காவல் நிலையத்தின் கீழ் கிளாம்பாக்கம், காரணை- புதுச்சேரி, ஐயஞ்சேரி, ஊனமாஞ்சேரி, வண்டலுார் பூங்கா ஆகிய பகுதிகள் வருகின்றன. தவிர, புதிய கட்டடத்தில் சட்டம் - ஒழுங்கு, குற்றப் பிரிவு, போக்குவரத்து, அனைத்து மகளிர், போக்குவரத்து புலனாய்வு என, ஐந்து வகையான காவல் பிரிவுகளும், ஒரே கட்டடத்தில் இயங்க உள்ளதாக கூறப்பட்டது. இதனால், புகார்தாரர்களுக்கு அலைச்சலும், நேர விரயமும் மிச்சமாகும். தவிர, உதவி கமிஷனர் அலுவலகமும் இதே கட்டடத்தில் இயங்க உள்ளதால், புகார்தாரர்கள் குறைகளை உடனடியாக எடுத்துரைக்க முடியும். ஆனால், காவல் நிலையம் திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும், இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே, புதிய காவல் நிலைய கட்டடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். கூடுதல் இடவசதி இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: புதிய கட்டடத்தில் சட்டம் - ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து ஆகிய மூன்று வகை காவல் பிரிவுகள் மட்டும் இயங்கும் என, முதலில் கூறப்பட்டது. அதன் பின் அனைத்து மகளிர், போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையங்களுடன், உதவி கமிஷனர் அலுவலகமும் இயங்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் புதிய கட்டடம் திறக்கப்பட்ட பின், ஆய்விற்கு வந்த உயரதிகாரிகள், இந்த கட்டடத்தில் கூடுதலான இட வசதி இருப்பதை அறிந்தனர். எனவே, தாம்பரம் மாநகர காவல் இணை கமிஷனர் அலுவலகம், நுண்ணறிவு பிரிவு அலுவலகம் ஆகியவற்றையும் இங்கேயே இயக்கலாம் என முடிவு செய்தனர். தவிர, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உள்ளே பொருத்தப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளையும், இங்கிருந்தே கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஐந்து வகை காவல் நிலையங்கள், இரண்டு அதிகாரிகள் மற்றும் நுண்ணறிவு பிரிவு அலுவல கம், கண்காணிப்பு கேமரா கண்காணிப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து செயல்பட உள்ளதால், ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணிகள், தற்போது நடைபெறுவதாக கூறப் படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்து, புதிய கட்டடத்தில், ஒவ்வொரு காவல் பிரிவாக விரைவில் இயங்க துவங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேரம், அலைச்சல் குறையும்

கிளாம்பாக்கத்தில் தற்போது இயங்கி வரும் காவல் நிலைய கட்டடத்தில், சட்டம் - ஒழுங்கு, குற்றப் பிரிவு ஆகிய இரண்டு காவல் நிலையங்கள் மட்டும் செயல்படுகின்றன. போக்குவரத்து பிரிவு காவல் துறை, வண்டலுார் உயிரியல் பூங்கா சந்திப்பில் உள்ள பாலத்தின் கீழ் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. தவிர, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம் பொத்தேரியில் இயங்கி வருகிறது. அனைத்து மகளிர் காவல் நிலையம் கூடுவாஞ்சேரியில் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையங்கள் அனைத்தும், தற்போது ஒரே கட்டடத்தில் இயங்க உள்ளதால், புகார்தாரர்களுக்கு நேரம், அலைச்சல் மிச்சமாகும்.

சி.எம்.டி.ஏ., கைவிரிப்பு

இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் கூறியதாவது: காவல் நிலையத்திற்கான புதிய கட்டடத்தை முழுமையாக கட்டி, அதை காவல் துறை வசம் ஒப்படைத்து விட்டோம். அத்துடன் எங்கள் பணி நிறைவடைந்து விட்டது. தற்போது, காவல் நிலையத்தின் உள்ளே, ஒவ்வொரு துறையின் தேவைக்கும் ஏற்ப, உள் அலங்காரம் மற்றும் கட்டமைப்பு பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு, சி.எம்.டி.ஏ., கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை