மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உடையது. தற்போது, நகராட்சி பராமரிப்பில் உள்ள, 12 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் வாயிலாக, 24 வார்டுகளைச் சேர்ந்த மக்களுக்கு, குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இப்பகுதிவாசிகளின் குடிநீர் தேவைக்காக, மத்திய அரசின் 'அம்ருத்' திட்டத்தின் கீழ், 30.4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, புதிதாக மதுராந்தகம் ஏரியில், ஆறு குடிநீர் கிணறுகள் அமைத்து, நான்கு வார்டுகளுக்கு, தலா ஒரு கிணறு என்ற அடிப்படையில் பணி மேற்கொள்ளப்பட்டது.இதில், மதுராந்தகம் ஏரியில் வெட்டப்பட்ட கிணறு பணிகள், துறை சார்ந்த அதிகாரிகளின் அனுமதி கிடைக்க பெறாததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மோச்சேரி பகுதியில், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் 23வது வார்டு மாம்பாக்கம் பகுதி வி.ஐ.பி., நகரில், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும், வார்டு பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. தற்போது பயன்பாட்டில் உள்ள, 12 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இணைப்பு வழங்கி, அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.தற்போது 3,400 குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. அம்ருத் திட்டத்தின் கீழ், நகராட்சியில் உள்ள 6,300 குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக, அனைத்து குடும்பங்களுக்கும் துாய்மையான, சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட உள்ளது.குடிநீர் குழாய் பதித்தல் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள், இன்னும் ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது, என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருமானம்
மதுராந்தகம் நகராட்சியில், 3,400 குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு, மாதம் 50 ரூபாய் வீதம், ஆண்டிற்கு 600 ரூபாய் என, 20.64 லட்சம் ரூபாய் குடிநீர் பயன்பாட்டு கட்டணமாக பெறப்படுகிறது.அம்ருத் திட்டத்தின் மூலம், கூடுதலாக 3,100 குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்துவதன் வாயிலாக, மொத்தம் 6,400 குடும்பங்களுக்கு மாதம், 50 ரூபாய் வீதம், ஆண்டிற்கு 600 ரூபாய் என, 37.80 லட்சம் குடிநீர் பயன்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்படும்.