பைக்கை திருடி ஊர் சுற்றிய திருவிடைமருதுார் வாலிபர் கைது
செங்கல்பட்டு:விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குருசேவ்,30. இவர், செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டியில் தங்கி, அதே பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 4ம் தேதி, தன் 'ராயல் என்பீல்டு ஹிமாலயா' இருசக்கர வாகனத்தை செங்கல்பட்டு ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு, ரயில் வாயிலாக சொந்த ஊருக்குச் சென்றார்.மீண்டும், 10ம் தேதி வந்து பார்த்த போது, இவரது இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரிந்தது.புகாரின்படி, செங்கல்பட்டு நகர போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில், கடந்த 23ம் தேதி குருசேவ், தன் நண்பருடன் செங்கல்பட்டு பழைய ஜி.எஸ்.டி., சாலையில் சென்ற போது, திருடுபோன இவரது பைக், முன்னால் சென்றுள்ளது. அதில், இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் சென்றுள்ளனர். அவர்களை மடக்கி வாகனம் குறித்து கேட்ட போது, தப்பிச் சென்றனர்.இதை மொபைல் போனில் வீடியோ எடுத்த குருசேவ், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தார்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திருடிய இருசக்கர வாகனத்தை அந்த இளைஞர், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில், யாருக்கும் தெரியாமல் நிறுத்தி விட்டுச் சென்றார்.வீடியோவில் பதிவான பெண்ணை அடையாளம் கண்ட போலீசார், அவர் வாயிலாக இளைஞர் குறித்து விசாரித்தனர். இதில், அந்த இளைஞர் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் சந்துரு,23, என்பதும், மறைமலைநகரில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.இதையடுத்து, மறைமலைநகரிலுள்ள தனியார் தொழிற்சாலைக்குச் சென்ற போலீசார், அங்கிருந்த சந்துருவை கைது செய்தனர். விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.