உத்தண்டி கடற்கரையில் முள் கற்றாழை நடைபயிற்சி செல்வோருக்கு பாதிப்பு
உத்தண்டி: கடலில் அடித்து வரப்படும் முள் கற்றாழை செடிகள், உத்தண்டி கடற்கரையில் அதிக அளவு வளர்ந்துள்ளதால், சுற்றுலா பயணியர் மற்றும் நடைபயிற்சியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இ.சி.ஆர்., பகுதியில், நீலாங்கரை, அக்கரை, உத்தண்டி, பனையூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில், சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னையில் வசிக்கும் ஏழை, நடுத்தர மக்களுக்கு, இந்த கடற்கரை பொழுதுபோக்கு இடமாக உள்ளது. மேலும், காலை, மாலை நேரத்தில், மணலில் நடைபயிற்சி செய்வோர் அதிக அளவு வருகின்றனர். கடலரிப்பு, பலத்த அலை வீசும்போது, கடலில் உள்ள குப்பை, செடி போன்றவை கடற்கரையில் அடித்து வரப்படும். அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றுவர். சில மாதங்களாக, முள் கற்றாழை செடிகள் அடித்து வரப்படுகின்றன. பல நாட்களாக அகற்றாத கற்றாழைகள் செடிகள் முளைத்து வளர்ந்துள்ளன. இதனால், சுற்றுலா பயணியர் மற்றும் நடைபயிற்சி செய்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சில இளைஞர்கள், விளையாட்டாக கற்றாழை செடியை பிடுங்கி மணலில் வீசுகின்றனர். மணலில் ஓடி, குழி தோண்டி விளையாடும், சிறுவர், சிறுமியர் கையில், கற்றாழை முள் குத்தி காயம் ஏற்படுகிறது. மேலும், மணல் மேற்பகுதியில் கிடக்கும் கற்றாழையை தெரியாமல் மிதிக்கும் நடைபயிற்சியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், கடற்கரையில் வளரும் முள் கற்றாழை செடிகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.