பெண்ணிடம் செயின் பறித்த மூவர் கைது
மறைமலை நகர்:பெண்ணிடம் செயின் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை பகுதியை சேர்ந்தவர் செலினா, 40. கடந்த 2ம் தேதி இரவு திருச்சியில் இருந்து மறைமலை நகருக்கு ஆம்னி பேருந்தில் வந்தார். இரவு 10:00 மணிக்கு மறைமலை நகர் ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது முகத்தில் மாஸ்க் அணிந்து டி.வி.எஸ்., 'அப்பாச்சி' பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் செலினா கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க தாலியை பறிக்க முயன்றனர். இதில் செயினின் ஒரு பகுதியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் காட்டாங்கொளத்துார் ஜி. எஸ்.டி., சாலையில் இருந்த மறைமலை நகர் போலீசார் மர்ம நபர்களை துரத்தி சென்ற நிலையில் மூவரும் காந்தி நகர் பகுதியில் சென்று மறைந்தனர். செலினா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் மறைமலை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மறைமலை நகர் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த லிங்கா, 26, மணிகண்டன், 20. வினோத், 23.என்பது தெரிய வந்தது. மூவர் மீதும் மறைமலை நகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார் செங்கை கிளை சிறையில் அடைத்தனர்.