சென்னை::'செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம், திருநீர்மலை, மணப்பாக்கம், ஆலந்துார், சைதாப்பேட்டை பகுதிகள் வழியாக பாய்ந்து, வங்கக்கடலில் கலக்கும் அடையாறு ஆற்றை மீட்டெடுத்து, அழகுற சீரமைக்கும் திட்டம், தனியார் பங்களிப்புடன், 1,500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்' என, 2024 - 25 தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.சட்டசபையில், 2024 - 25ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், அடையாறு ஆறு சீரமைப்பு, தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம், கடற்கரைகளை அழகுபடுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அவற்றின் விபரம்: ↓சென்னை மாநகராட்சியில், உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பை மேம்படுத்த, 'சிங்கார சென்னை 2.0' திட்டத்திற்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது ↓சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலைகள், 59 அடியாக அகலப்படுத்தப்பட உள்ளன. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலைகளை, 100 அடி சாலையாக அகலப்படுத்தும் திட்டம், 300 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் ↓சென்னை கடற்கரையோர பகுதிகளான கோவளம், எண்ணுார், பெசன்ட் நகர் ஆகிய பகுதிகள், 100 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு, புதிய வசதிகளுடன் அழகுபடுத்தப்படும் ↓சென்னையின் முக்கிய நீர் வழிகளான அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு ஆகியவற்றை சீரமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம், திருநீர்மலை, மணப்பாக்கம், ஆலந்துார், சைதாப்பேட்டை பகுதிகள் வழியாக பாய்ந்து, வங்கக்கடலில் கலக்கும் அடையாறு ஆற்றை மீட்டெடுத்து அழகுற சீரமைக்கும் திட்டம், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், 1,500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் ↓அடையாறு ஆற்றின் இரு கரைகளிலும், 70 கி.மீ., துாரத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைத்து, கழிவுநீர் வெளியேறுவதற்கு ஏற்ற மாற்று வழிகளை அமைத்து, தினமும் 11 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட, 14 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். ஆற்றின் கரையோரங்களில் நான்கு பூங்காக்கள் அமைத்தல், பசுமை பரப்பை அதிகரித்தல் உள்ளிட்ட பணிகள் துவக்கப்பட்டு, 30 மாதங்களில் முடிக்கப்படும். சைதாப்பேட்டை முதல் திரு.வி.க., பாலம் வரையிலான பணிகள், 15 மாதங்களில் முடிக்கப்படும் ↓சென்னை மாநகராட்சியில், பசுமை தமிழ்நாடு இயக்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு, 'நகர்ப்புற பசுமை திட்டம்' என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ↓மாநகராட்சியில் பொது கழிப்பறைகளை நவீன முறையில் சீரமைத்து வடிவமைத்தல், இயக்குதல், பராமரித்தல் மற்றும் புதிய கழிப்பறைகளை கட்டுதல் பணிகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில், 430 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. தற்போது சில மண்டலங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், அனைத்து மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் ↓சென்னை மாநகரில் குடிநீர் தேவையை நிறைவு செய்ய, 1,517 கோடி ரூபாய் மதிப்பில், நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் முடிவுபெறும் நிலையில் உள்ளது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், 9 லட்சம் மக்கள் பயன் பெறுவர்.வடசென்னை வளர்ச்சி பணி
↓நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் சென்னையில், வடசென்னை பகுதிகளில் போதிய அளவு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதையடுத்து, வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு சி.எம்.டி.ஏ., நிதி 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை, நகராட்சி நிர்வாக துறைக்கு சி.எம்.டி.ஏ., நிர்வாகம் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 1,000 கோடி ரூபாயில், வடசென்னையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும், இந்த பட்ஜெட்டில் விளக்கப்பட்டுள்ளதுஇதன்படி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தில், வாட்டர் பேசின் சாலையில், 75 கோடி ரூபாயில் புதிய குடியிருப்புகள்; எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், 53 கோடி ரூபாயில் உயர்தர சிகிச்சை பிரிவு; ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் 96 கோடி ரூபாயில், 2 புதிய கட்டடங்கள் கட்டப்படும்பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் 55 கோடி ரூபாயில், 3 புதிய தளங்கள்; 11 கோடி ரூபாயில் தொழிற்பயிற்சி நிலையம்; 30 கோடி ரூபாயில் ரெட்டேரி, வில்லிவாக்கம், பாடி ஏரிகளை சீரமைத்தல்; 45 கோடி ரூபாயில், 10 பள்ளிகளை புதுப்பித்தல், மேம்படுத்துதல், கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள், 1,000 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் ↓வடசென்னை பகுதிகளில் கழிவுநீர் மற்றும் குடிநீர் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு, கழிவுநீரை திறம்பட அகற்றுவதற்கும், நீர்நிலை மாசுபாட்டை தவிர்ப்பதற்கும், 946 கோடி ரூபாய் மதிப்பில், புதிய திட்டம் நிறைவேற்றப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவுத்திடலில் தியேட்டர்
↓சென்னை, தீவுத்திடலில், இயற்கை வனப்புடன் கூடிய நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் போன்ற நவீன சமூக கட்டமைப்பு வசதிகள், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., வாயிலாக, 104 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் ↓பூந்தமல்லி அருகே, அதிநவீன திரைப்பட நகரம், 150 ஏக்கர் பரப்பளவில், 500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும். இதில், 'வி.எப்.எக்ஸ்., அனிமேஷன், எல்.இ.டி., வால்' போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள், அரசு தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் எனவும், தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.