மாமல்லபுரம்:மாமல்லபுரம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக வளாக, வாகன நிறுத்துமிட கட்டணம் வசூலிக்கும் குத்தகை, 15 லட்சம் ரூபாய்க்கு தனியாரிடம் அளிக்கப்பட்டது.மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில், நகர்ப்புற வளர்ச்சித் துறையின், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழும சுற்றுலா வாகன நிறுத்துமிடம் உள்ளது.அங்கு வாகனங்கள் நிறுத்த கட்டணம் உண்டு. போதிய இடமில்லாத சூழலில், வாகனங்கள் சாலையில் தேங்குகின்றன.அவ்வளாகம் எதிரில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதி வளாகம் உள்ளது. பல ஆண்டுகளாக விடுதி இயங்கவில்லை.விடுதி நிர்வாகம், அதன் திறந்தவெளி பகுதியை, 2022ம் ஆண்டு, மார்ச் முதல், வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்துகிறது.சுற்றுலா வாகனங்கள் நிறுத்த, பேருந்திற்கு தலா 100 ரூபாய், வேனிற்கு தலா 50 ரூபாய், காருக்கு தலா 30 ரூபாய், இருசக்கர வாகனத்திற்கு தலா 10 ரூபாய் என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டும், ஓராண்டில் அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வசூலானதாக, நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டு சர்ச்சை ஏற்பட்டது.இதையடுத்து, கட்டண வசூல் குத்தகையை, தனியாரிடம் அளிக்க முடிவெடுக்கப்பட்டது. ஜன., 15 முதல், அடுத்த ஆண்டு ஜன., 14 வரை, குத்தகை வசூலிக்க, அண்மையில் ஏலம் நடத்தப்பட்டது.இது குறித்து, நிர்வாகத்தினர் கூறியதாவது:கட்டண வசூல் மிகவும் குறைவாகவே இருந்தது. எனவே, தனியாரிடம் குத்தகை அளிக்க முடிவெடுத்து, தற்போது பொது ஏலம் நடத்தினோம்.அதிகபட்சமாக 15.23 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்டவருக்கு, குத்தகை அளித்துள்ளோம். குத்தகைதாரர் ஜி.எஸ்.டி., வரியுடன் சேர்த்து செலுத்தி. நிர்வாகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.