| ADDED : ஜூன் 12, 2024 05:38 PM
மறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி நேற்று நடந்தது.வேளாண் அறிவியல் மையத் தலைவர் சித்தார்த் தலைமை வகித்தார். இந்த பயிற்சியில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.பயிற்சியில், காளான் வகைகள், விதை உற்பத்தி, பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துதல் குறித்து, உதவி பேராசிரியர் காயத்ரி விளக்கினார்.காளான் வளர்ப்பு குறித்து, உதவி பேராசிரியர் காயத்ரி கூறியதாவது:காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் பருவ நிலைக்கு, சிப்பி காளான் நன்கு வளரும். குடில் அமைத்தல், வைக்கோல் வைத்து மெத்தை போன்ற அமைப்பில் காளான்களை வளர்க்க வேண்டும்.இவற்றை, காளான் ஊறுகாய், பிரியாணி, பொடி, சூப் என மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மேம்படுத்தி விற்றால் நல்ல வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள காளான் பண்ணையை பார்வையிட்டனர்.