இந்திய கடற்படையில் சேர மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், கோவளம், சட்ராஸ், முதலியார்குப்பம் ஆகிய கடலோர பாதுகாப்பு குழும எல்லை சார்ந்த கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்களின் பிளஸ் 2 முடித்த மகன், மகள்கள் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.இப்பயிற்சியில் சேர மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் கணிதம், அறிவியலில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோர், கடலூர் மாவட்டத்தில் அடிப்படை சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ள மீனவர்களின் வாரிசுகள், நவ., 15க்குள் கோவளம், சட்ராஸ், முதலியார்குப்பம் ஆகிய கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திலும், நீலாங்கரை மீன்வளத்துறை அலுவலகத்திலும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.பயிற்சியின் போது, மாணவர்களுக்கு உணவு, உடைகள், தங்கும் இடம், பாடக் குறிப்பேடுகள், காலணிகள் ஆகியவற்றுடன், மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை கடலோர மீனவ இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தெரிவித்தனர்.